search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நொய்யல் ஆறு"

    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதன் காரணமாக, நோய் தாக்குதல் ஏற்பட்டு வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
    நொய்யல்:

    கரூர் மாவட்டத்தில் வெற்றிலை விவசாயத்திற்கு புகழ் பெற்றது புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரம். இங்கு காவிரி ஆறு மற்றும் அதில் இருந்து பிரியும் புகளூர் வாய்க்கால், பள்ள வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகிய 5 வாய்க்கால்கள் மூலம் நீர்பாசனம் நடக்கிறது.

    இங்கு விளையும் வெற்றிலைகள் உள்ளூர் வெற்றிலை மண்டிகளுக்கும், நாமக்கல் மாவட்டம், வேலூர் தினசரி மார்க்கெட்டுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஏல முறையில் வாங்கப்படும் வெற்றிலைகள் தமிழகம் மற்றும் வட இந்தியாவிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நொய்யல் ஆறு மற்றும் காவிரி நீரில் சாயக்கழிவுநீர் மற்றும் தொழிற்சாலையின் கழிவுகள் கலந்து வருகின்றன. இந்த நீரை பாய்ச்சியதால், தற்போது புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரத்தில் மண்வளம் குறைந்ததுடன் நீரும் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரத்தில் வெற்றிலை கொடிகளில் கணு அழுகல், இலைப்புள்ளி, வாடல்நோய் போன்ற நோய்களால் தாக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புகளூர் மற்றும் நொய்யல் வட்டாரத்தில் உள்ள வெற்றிலை கொடிக்கால்களில் வெற்றிலை உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் புகளூர் வேளாண்துறை அதிகாரி டாக்டர் திரவியம், கரூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ராஜவேலு, துணை இயக்குனர் மோகன்ராம், திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர் சங்கீதா, நபார்டு வங்கி பரமேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் புகளூர் மற்றும் நொய்யல் பகுதிகளுக்கு வந்தனர். 

    அங்கு புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து பூச்சி மற்றும் நோய் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் வெற்றிலைகளை தாக்கும் நோய் குறித்து தகவல் தெரிவித்தால், அதை போக்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினர். பின்னர் பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கால்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வெற்றிலைகள், மண்வகைகள், நீர் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்து சென்றனர். 
    கரூர் மாவட்டம் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா வல்லா குளத்துப்பாளையம், வெள்ளியம்பாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்து மனுவில், எங்கள் பகுதி வழியாக ஓடும் நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளைவாய்க்கால்களில் திருப்பூரில் இருந்து  சாயக்கழிவு நீர் சேர்ந்து வருவதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

    இந்த நிலையில் அத்திப்பாளையம் அருகேயுள்ள பகுதியில் சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தார் கலவை செய்யும் ஆலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆலை அமைப்பதற்கு அனுமதியை வழங்க கூடாது  என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கரூர் அருகே ஜெகதாபி ஊராட்சி மோளகவுண்டனூரை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இந்த நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டிருப்பதாலும், ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உள்ளதாலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றோம். எனவே இதனை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல தமிழக மக்கள் முன்னேற்ற கழக கரூர் மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், குடும்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தார் உள்ளிட்ட 7 பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும். எனவே அதனை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் நகரில் சமூக நல்லிணக்கம் ஏற்படும் வகையில் அரசு சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என ஆதிதமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.  
    கடவூர் வாழ்வார் மங்கலம் கிராமமக்கள், மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், நீர்நிலைகளை  பாதுகாக்கும் பொருட்டு வாழ்வார் மங்கலத்திலுள்ள ஏரியை தூர்வாரிபனை விதைகளை நட்டு வருகிறோம். இந்த நிலையில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவக்குறிச்சி தாலுகா துக்காச்சி புதூர் மக்கள் அளித்த மனுவில், நொய்யல் ஆற்றை ஒட்டி குடியிருந்து வரும் எங்களது வீடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே எங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் கொடுத்த மனுவில், கரூரிலுள்ள 125 ஆண்டு பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயத்தை சுற்றிலும் சிலர் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நொய்யல்:

    நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வரும்போது தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவு நீரை நொய்யல் ஆற்றில் வரும் மழைநீருடன் கலந்து விடுவது வழக்கம். இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததையொட்டி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, வெள்ளம் இருகரையையும் தொட்டு செல்கிறது.

    கடந்த சில நாட்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதிகளை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக் கழிவுடன் சேர்ந்து வருவதால் கரும்பச்சை நிறத்தில் தண்ணீர் வருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் வருவதால், நொய்யல் ஆற்றின் சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும்போது, காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீரின் கலரே தெரியாத நிலையில் உள்ளது.

    இது சாயப்பட்டறை அதிபர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் வருவதால் நொய்யல் ஆற்றில் கலந்து இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதே போல் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டுமென நொய்யல் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    திருப்பூர் பெத்திசெட்டிப்புரம், ராயபுரம் பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையோடு தண்ணீர் ஓடியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். #Noyyalriver

    திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நொய்யல் ஆற்றில் வெளியேற்றியதால் விவசாய நிலங்கள் பாழ்பட்டுபோனது.

    இதை தடுக்கும் வகையில் சாயக்கழிவுநீரை பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து அந்த நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க அவ்வப்போது முறைகேடாக சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விடுவதும் தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது.

    பொதுவாக மழை பெய்யும் காலத்தில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்லும்போது சாயக்கழிவுநீரை திறந்து விட்டு நுரை பொங்கி பாய்வது வழக்கம். ஆனால் நேற்று இரவு நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரை பொங்க தண்ணீர் பாய்ந்தது.

    திருப்பூர் பெத்திசெட்டிப்புரம், ராயபுரம் பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையோடு தண்ணீர் ஓடியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரசாயன கழிவுகள் கலக்கும்போது தான் தண்ணீர் நுரை பொங்கி பாயும். ஆனால் நேற்று அதிக அளவில் வெள்ளை நுரையாக நொய்யல் ஆறு காட்சியளித்தது. மாலை நேரத்தில் திடீரென்று நொய்யல் ஆற்றில் கழிவுநீர் திறந்து விட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.

    இது குறித்து அந்த பகுதியினர் கூறும்போது, நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக ஒருபுறம் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். ஆனால் மறுபுறம் சாயக்கழிவுநீரை திறந்து விட்டு விடுகிறார்கள். குறிப்பாக இரவு, அதிகாலை நேரத்தில் இவ்வாறு நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்து விடுகிறார்கள். வெள்ளை நுரையோடு தண்ணீர் பாயும்போதே நமக்கு தெரிகிறது.

    சில நேரங்களில் பல வண்ணங்களில் சாயநீரையும் அப்படியே திறந்து விட்டு விடுகிறார்கள். இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர். #Noyyalriver

    நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் குளித்த போது தடுப்பணையில் மூழ்கி வங்கி ஊழியர் மரணம் அடைந்தார்.
    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் தேங்காய் கடை நடத்தி வருபவர் ரவி.

    இவரது மகன் திவாகர் (20) கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று திவாகர் நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றார்.

    அப்போது அணையின் மேற்கு பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது திவாகர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் சுழலில் சிக்கி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை நேரத்திற்கு மேலாக போராடி, தடுப்பணையில் சேற்றில் சிக்கியிருந்த திவாகரை பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இவற்றின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சாடிவயல் அருகே உள்ள நண்டங்கரை தடுப்பணை நிரம்பி வழிகிறது.

    கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாடி வயல் சின்னாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரை சாவடி தடுப்பணையும் நிரம்பி வழிகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் உள்ள தரைப்பாலத்தை ஒட்டிய படி வெள்ளம் செல்கிறது.

    நொய்யல் வெள்ளம் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள வெள்ளலூர் அணைக்கட்டு பகுதியை நேற்று கடந்து சென்றது. அணைக்கட்டில் இருந்து ராஜ வாய்க்கால் மூலம் வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் சென்று வருகிறது.

    அணைக்கட்டை தாண்டி வெளியேறும் நீரில் வெண்மை நிறத்தில் நுரை பொங்கியது. காற்று பலமாக வீசிய போது நுரை காற்றில் பறந்து அக்கம் பக்கத்தில் வீடுகள் உள்ள விவசாய தோட்டங்களில் விழுந்தது.

    உடலில் நுரை படும் இடங்களில் அரிப்பு ஏற்படுவதாகவும், சாயக் கழிவுகள் கலக்கப்படுவதாலே ஆற்றில் நுரை பொங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

    நொய்யல் ஆற்று தண்ணீரில் சாயக்கழிவு கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    நொய்யல் ஆற்றை ஒட்டி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அதே பகுதியில் சாய சலவை ஆலையும் உள்ளது. இவற்றின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆற்றில் நீர் வரும் போது நுரை பொங்கி சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 24 குளங்கள் உள்ளது. பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக குமாரசாமி குளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம், உக்குளம் ஆகிய 4 குளங்கள் நிரம்பி விட்டது.

    உக்கடம் பெரிய குளம், புதுக்குளம் ஆகியவை நிரம்பும் நிலையில் உள்ளது. கோலராம்பதி குளத்துக்கு தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளளவில் 75 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.150 கோடியில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சிமாநதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று, மேற்கு கிழக்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று, கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.

    திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நடை பாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

    இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெடுஞ்சாலைகளில் அதிகமாக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அவ்விடங்களில் சோதனை அடிப்படையில், வாகனப் பதிவெண் பலகையினை படிக்கும் தானியங்கி புகைப்படக் கருவிகள் மற்றும் வாகன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் 25 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    ×